×

சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வருவதால் பல்லுயிர் பாரம்பரிய சின்னமாக மாறுகிறது வாகைகுளம்

கடையம் : பல்லுயிர் பாரம்பரிய சின்னமாக மாறும் வாகைகுளத்தில் தமிழ்நாடு உயிரி பல்வகைமை வாரியத்தின் செயலாளர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். தென்காசி மாவட்டம் கடையம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த வாகைக்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100 வகையான பறவைகள் சுமார் 15000 எண்ணிக்கையில் உள்ளது.

இங்கு வெள்ளை அரிவாள் மூக்கன், நீர்காகம், பாம்புதாரா, கூழைக்கடா, சாம்பல் நாரை, நத்தை குத்தி நாரை என 20 சிற்றினங்களை சேர்ந்த பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து வருகிறது. வெளிநாடு பறவைகள் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வந்து  இன விருத்தி செய்த பிறகு ஜனவரி, பிப்ரவரி, மே மாதங்களில் திரும்பிச் செல்கிறது.

சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த வாகைகுளத்தை உயிரிபல்வகைமை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க பரிந்துரைக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இப்பகுதி உயிரி பல்வகைமை பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டால் மக்களின் பாரம்பரிய உரிமையான ஆடு, மாடு மேய்த்தல், மீன்பிடி, கரம்பை மண் சேகரம், குளத்தை தூர்வாருதல் போன்றவைகள் அனுமதிக்கப்படாது என்று வாகைக்குளம் மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது. எனவே, பொதுமக்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் தமிழ்நாடு உயிரி பல்வகைமை வாரியத்தின் செயலாளர் சேகர்குமார் நீரஜ்,  குளத்தை பார்வையிட்டு மக்களிடையே கலந்துரையாடினார்.

அப்போது அவர், பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதன் மூலம் எந்த ஒரு உரிமையும் பாதிக்கப்படாது. முழு நிர்வாகமும் பஞ்சாயத்து மூலம் நியமிக்கப்படும், உயிரி பல்வகைமை மேலாண்மை குழுவிடம்தான் இருக்கும். வனத்துறையால் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்க முடியாது என்று பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து அவர், பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதன் மூலம் குளத்திற்கும் பறவைகளுக்கும் பாதுகாப்பு கிடைப்பதுடன் சூழல் சுற்றுலா போன்றவற்றின் மூலமாக பஞ்சாயத்துக்கு வருவாய் கிடைக்கும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, நெல்லை உதவி பயிற்சி வனப்பாதுகாவலர் பானுப்பிரியா, நெல்லை வனச்சரகர் சரவணக்குமார், ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி சுற்றுச்சூழல் மையம் துறைத் தலைவர்  செந்தில்நாதன், மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், வீராசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீனத் பர்வீன் யாகூப், மாவட்ட பிரதிநிதி முகம்மது யாகூப், ஊராட்சி செயலாளர் பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kadaiyam,Vaagaikulam, traditional symbol
× RELATED தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு...